வண்ணத் தாள்கள்

•ஏப்ரல் 28, 2011 • 1 பின்னூட்டம்

விரட்டுவதற்கு சருகுகளின்றி
அனாதையாய் சுற்றுகிறது காற்று.

இளம் மூங்கில்களில் செய்த
வண்ணத் தாள்களில் பொலிகிறது அழகிய இயற்கையுடன்
நடுப்பக்கத்தில் வன மோகினியின் கவர்ச்சிப்படங்கள்.

காதலிகளின் கண்ணீர் துடைத்தெறியும்
மெல்லிய தாள்கள் கீழே விழுகின்றன
மரக்கிளைகள் முறியும் சத்தத்துடன்.

Advertisements

நீ – நினைவுகள்

•ஜனவரி 25, 2011 • 1 பின்னூட்டம்

படுக்கையறை நிலைக்ககண்ணாடியில் ஒட்டிய உன் வட்டப் பொட்டுக்களும்
என் புத்தககங்களில் நீ முனை மடித்த பக்கங்களும்
ஒப்புக்கொள்ள மறுக்கின்றன
பிரியும் முன் நீ கொடுத்தது கடைசி முத்தம் என்று.

நினைவுகள் நீயாகவும்
நீ நினைவுகளாகவும்
மாறிய பின்
பிரிகிறோமா சந்திக்கிறோமா என்பது விளங்குவதேயில்லை.

காற்றாறு

•ஜனவரி 25, 2011 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

chimes கடலைக் கடந்து பின் கரையைக் கடந்து
சிலருக்கு புயலாகவும் பலருக்கு புள்ளி விபரமாகவும்
மறையும் முன்
சிதைந்த வீடுகளின் சீன மணிகளை சந்தோஷப் படுத்திச் செல்கிறது
காற்று.

எல்லார்க்கும் பெய்யா மழை!

•செப்ரெம்பர் 7, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

சாயங்கால திடீர்மழையின்
குளிர்வில் ஆவி பொங்கும் சாலையில்
உடல் குறுக்கி, கைப்பை இறுக்கி
கால் பாவாமல் நடக்கும் உன்னைத் தவிர
எல்லாம் நின்றுவிட்டது
மழை புதுப்பித்த உன்னையும்
நீ புதுப்பித்த என்னையும் பார்த்து.

வினோதினி

•செப்ரெம்பர் 7, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

உன் முத்தம் அணைக்கும் தீயை
உன் மூச்சு விசிறி விடுகிறது
ஒரு நொடி குளிர்விக்கும் கண்கள்
சுட்டு எரிக்கும் மறு நொடி
இறகாய் இருக்கும் நீ பிரிந்த பின்
கல்லாய் கனக்கும் மனம்

பழக்கதை

•ஏப்ரல் 13, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

உள்ளும் புறமும் ஒரே நிறமுடன் சப்போட்டா
வெளிர் சிவப்பின் அழகு சோபிக்கும் தர்பூசணிகள்
அணிவகுத்த ஒழுங்கு குலையாத விதைகளுடன்பப்பாளிகள்
இவையெல்லாம் விட
நீர் முத்துக்கள் படர்ந்த கோப்பயை இறுகப் பற்றியிருக்கும் உன் விரல்கள்
– ஒரு கோடை இதை விட எப்படி அழகாக இருக்க முடியும்!

தனியே …

•பிப்ரவரி 8, 2010 • பின்னூட்டமொன்றை இடுங்கள்

கடற்கரை மணலில் பாதம் பதித்த குழிகளை
ஓடி வந்து நிரப்பும் அலைகளும்

கட்டிட முகடுகளில் அமர்ந்து முணுமுணுத்து
சிறு சத்த்ம் கேட்டு பறந்து மீண்டும் வந்து அமரும் புறாக்களும்

வழிகாட்டுகின்றன உன் நினைவுகளுக்கு என் இருப்பிடத்தை.